மேட்ரிமோனி ஆப் மூலம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபரை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் செகந்திராபாத்தில் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் பெசட்டி மணிகண்டா சாய் (வயது 23). இவர் பி டெக் பட்டப்படிப்பு முடித்தப் பிறகு தெலுங்கானா மாநிலத்தில் உள்ள டாடா கன்சல்டென்ஸியில் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரைப் பற்றி கடந்த மே மாதம் கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை, கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் மேட்ரிமோனி ஆப் மூலமாக தனக்கு பழக்கம் ஏற்பட்ட சைதன்யா ரெட்டி என்கிற மணிகண்டா பிரபு, தன்னை ஏமாற்றி 3.36 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் அந்தப் பணத்தை திருப்பி கேட்டதற்கு அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையதளத்தில் வைரல் ஆக்கி விடுவேன் என மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கிழக்கு மண்டல சைபர் கிரைம் ஆய்வாளர் பத்மகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.
முதற்கட்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த பெண் சென்னையில் மேற்படிப்பிற்காக வந்தது தெரிய வந்தது. அவரிடம் தெலங்கானாவை சேர்ந்தவர பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படத்தை மாற்றி பல பெண்களை இந்த நபர் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து அவருடைய செல்போன் என்னை வைத்து தெலுங்கானா மாநிலம் சென்ற சைபர் கிரைம் போலீசார் அவரை செகந்திராபாத்தில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டா பிரபுவை சென்னை அழைத்து வந்து துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்
விசாரணையில் கேரள பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதும் மேலும் பல இன்ஸ்டாகிராம் ஐடிகளை கிரியேட் செய்து 10 பெண்களை இதே போன்று ஏமாற்றி வருவதும் மணிகண்டா பிரபு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனிடையே பெண்களிடம் பறிக்கப்பட்ட பணத்தை உல்லாசமாக செலவு செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் மன்மதன் மணிகண்டா பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார்.