விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; காதலன் கொலை!

விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; காதலன் கொலை!

கோவை: கோவையில் காதலியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற காதலன் கொலை.

கோவையில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் பிரசாந்த் (21), ஒரு தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார்.

பிரசாந்தும், செட்டிப்பாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யாவும் (19)   கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. தொடக்கத்தில் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்த  இருவீட்டாரும், பின்பு இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து, அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை தன்யாவின் பிறந்தநாள் என அறியப்படுகிறது. அதனால், தனது காதலிக்கு வாழ்த்துக் கூற, தனது நண்பர்கள் மூவருடன், நள்ளிரவில் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார் பிரசாந்த். 

இரவு 12 மணி அளவில் பிரசாந்தின் காதலியின் வீட்டு கதவை தட்டியபோது, தன்யாவின் தந்தை மகாதேவன்(41) மற்றும் உறவினரும் டாக்ஸி ஓட்டுனருமான விக்னேஷ் (29) இருவரும் கதவை திறந்துள்ளார்கள். அப்போது, பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அப்போது, பிரஷாந்துக்கும் விக்னேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பிரசாந்த், விக்னேஷை கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், அங்கிருந்த கத்தியால் பிரசாந்தை குத்தியுள்ளார். இதில், பிரசாந்துக்கு காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து, பிரசாந்தின் நண்பர்கள், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில், வாகனம் எரிபொருள் இல்லாமல் நிற்கவே, அவசர ஊர்தியை அழைத்து, அதில் ஏற்றி அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில், பிரசாந்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், உறவினர் விக்னேஷ் மற்றும் தன்யாவின் தந்தை மகாதேவனை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். 

காதலியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற காதலனுக்கு ஏற்பட்ட விபரீதச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.