அகழாய்வில் கிடைத்த 21 அடி தூண்...  இராஜேந்திர சோழனின் அரண்மனையா?

அகழாய்வில் கிடைத்த 21 அடி தூண்...  இராஜேந்திர சோழனின் அரண்மனையா?

மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியில் 21 அடி பிரமாண்டமான தூண் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப்பணியில் அரண்மனையின் கல்தூண் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் அடையாளமாக பிரகதீஸ்வரர் கோயில் கட்டினார். 

உலகப் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் அருகே மாளிகைமேடு என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தான் ராஜேந்திர சோழனின் அரண்மனை இருந்ததாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.

இங்கு நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வு பணிகளின் போது, மாமன்னன் ராஜேந்திர சோழன் கால அரண்மனையின் சுவர்கள், சீன வளையல்கள், இரும்பிலான ஆணிகள் உட்பட 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1982 இல் இருந்து மாளிகை மேடு சுற்றி  5 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள கிராமங்களில் அரண்மனை குறித்து தொல்லியல் எச்சம் எதுவும் தென்படுகிறதா என தொல்லியல் துறையின் சார்பில் பொன்னேரி கரை, மண்மலை, உள்ளிட்ட பகுதிகளில் முன்பே ஆய்வு மேற்கொண்டு  உள்ளனர்.   

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 3-ம் கட்ட அகழாய்வு பணிக்கு 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அகழ்வாய்வு பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், மாளிகைமேடு அருகேயுள்ள உட்கோட்டையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், 72 செ.மீட்டர் அகலம்,  6.40 மீட்டர் நீளம் வரையிலான கருங்கல் தூண்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தூணின் நீளம் முழுவதும் கிடைக்கப்படாத நிலையில்  இன்னும் கூடுதலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இவை அரண்மனைக்கு பயன்படுத்தப்பட்ட தூணாக இருக்காலம் என்றும், முழுமையாக தோண்டி எடுக்கப்பட்ட பின்னரே அவற்றின் முழுவிபரம் தெரியவரும் என தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தூண் முழுவதையும் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com