வாகன நிறுத்தத்தை தடுக்க முட்செடிகள் அமைப்பு...! பயணிகள் அவதி...!

வாகன நிறுத்தத்தை தடுக்க முட்செடிகள் அமைப்பு...! பயணிகள் அவதி...!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலைய முகப்பில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை தவிர்க்க கருவேல மர முட்செடிகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை காணப்படுகின்றது. தெற்கு ரயில்வேயில் சென்னைக்கு அடுத்து மிகவும் பழமையான மற்றும் பயணிகள் அதிகளவில் சென்று வரும்  ரயில் நிலையம் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையமாகும். 

அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் பணி நிமித்தமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காட்பாடி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு், தாம்பரம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 25 ஆயிரம் பயணிகள் விரைவு மற்றும் மின்சார ரயில்களில் சென்று வருகின்றனர். அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 300 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் நாள்தோறும் இருசக்கர வாகனங்களில் ரயில் நிலையம் வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். மேலும் பல நூறு இருசக்கர வாகனங்கள் ரயில் நிலைய முகப்பில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படுகின்றது.

இதனை தவிர்க்க இருசக்கர வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர் ரயில் நிலைய முகப்பில் கருவேல மர முட்செடிகளை தரையில் பரப்பி வாகனங்களை நிறுத்த தடை ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். வாகன நிறுத்தத்தை தவிர்க்க காவல்துறை உதவியை நாடாமல் முட்செடிகளால் தடுப்பு ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என ரயில் பயணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. முட்செடிகளை அகற்ற அரக்கோணம் நகர காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.