மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்ற வாகனம் சிறை பிடிப்பு...!

மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்ற வாகனம் சிறை பிடிப்பு...!

நெல்லையில் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்ற வாகனத்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சாந்தி நகர் குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகள் மற்றும் பீங்கான் பொருட்கள் டிராக்டர் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுவதாக இன்று காலை அப்பகுதி பொது மக்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பொதுமக்கள் விரைந்து சென்று மருத்துவக் கழிவுகளை கொட்ட முயன்ற வாகனத்தை கொட்ட விடாமல் தடுத்து சிறை பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவ கழிவுகளுடன் இருந்த டிராக்டரை பறிமுதல் செய்து பாளை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். வாகனத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் பீங்கான் பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : " எதிரணி என்று சொல்லும் அளவுக்கு கூட ஓபிஎஸ் அணியில் ஆட்கள் இல்லை.." - முன்னாள்  அமைச்சர்  ஜெயக்குமார்