9 மாதமாக கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண்...! மாமியாருக்கு பயந்து நடந்த சம்பவம்...!

9 மாதமாக கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண்...! மாமியாருக்கு பயந்து நடந்த சம்பவம்...!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 23 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அந்த பெண் 3 முறை கர்ப்பமானார். ஆனால், கரு வயிற்றில் தங்காமல் கலைந்து போயுள்ளது. இதற்கிடையே தற்போது 4-வது முறையாக அவர் கருவுற்றார். இந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஆனால், 4-வது முறையும் அவரது குழந்தைக்கான ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. அந்த கருவும் கலைந்து போனதால், என்ன செய்வதென்று தெரியாமல்இருந்துள்ளார். இது பற்றி தனது கணவரின் குடும்பத் தினருக்கு தெரிந்தால், தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி பயந்துள்ளார்.

இந்த நிலையில் மாமியாருக்கு பயந்து தனது வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கடந்த 9 மாதங்களாக கர்ப்பிணி போல் நடித்துள்ளார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருவதாகவும் வீட்டில் கூறி சென்று வந்தார். தற்போது குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக கூறி பிரசவம் பார்க்க சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு இளம்பெண்ணை அவரது தந்தை மற்றும் தாய், மாமியார், ஆகியோர் நேற்று முன்தினம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் தான் கருத்தரிக்கவில்லை, தனது வயிற்றில் துணியை வைத்து 9 மாதமாக கர்ப்பிணி போல் வீட்டில் நடித்து வந்தேன் எனவும் நான்கு முறை தான் கருத்தரித்தும் அது நிலைக்காமல் போய்விட்டது. அதனால் குடும்பத்தில் உள்ள மாமியார், உறவினர்கள் தன்னை ஒதுக்கி விடுவார்கள் என்று பயந்து கர்ப்பிணி போல் நடித்ததாக கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உங்களது குடும்பத்தினரிடம் நிலைமையை எடுத்து கூறுவதாக கூறி அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையே வெளியே வந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நான் கழிவறைக்கு சென்று வரும்போது குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போதுதான் அவர்கள் நடந்த சம்பவத்தை அவர்களுக்கு விளக்கி கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் நேரில் சென்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடமும் உரிய அறிவுரைகளை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க : சோளக்காட்டை சேதப்படுத்திய காட்டுயானைகள் கூட்டம்...! விரட்டும் பணி தீவிரம்...!