அம்பேத்கர் நினைவுநாள் அஞ்சலி செலுத்தகூடாது – பொதுமக்கள் மனு

மயிலாடுதுறை பட்டவர்த்தி மதகடி பகுதியில் அம்பேத்கர் நினைவு நாளில் ஒரு பிரிவினர் திருவுருவப்படம் வைத்து மரியாதை செலுத்துவதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அம்பேத்கர் நினைவுநாள் அஞ்சலி செலுத்தகூடாது – பொதுமக்கள் மனு

அம்பேத்கர் நினைவுநாள் அஞ்சலி செலுத்தகூடாது – பொதுமக்கள் மனு

மயிலாடுதுறை பட்டவர்த்தி மதகடி பகுதியில் அம்பேத்கர் நினைவு நாளில் ஒரு பிரிவினர் திருவுருவப்படம் வைத்து மரியாதை செலுத்துவதை தடுக்க கோரியும், இதனால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.

அம்பேத்கர் நினைவு நாள்

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அடுத்த மதகடி பகுதியில் வருகின்ற டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாள் அன்று அவரது திருவுருவப்படம் வைத்து மரியாதை செலுத்த இருப்பதாக விசிக கட்சியினர் தெரிவித்தனர். ஏற்கனவே இப்பகுதியில் கடந்த ஆண்டு அம்பேத்கர் நினைவு நாளில் இரு தரப்பின்னரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது.

144 தடை

மேலும் இந்த வருடம் அம்பேத்கர் பிறந்த நாளன்று (ஏப்ரல் -14) அங்கு 144 தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இந்த வருடம் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிக்கப்படுவது தொடர்பாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ யுரேகா தலைமையில் இரு தினங்களுக்கு முன்பு இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் முறையான உடன்பாடு ஏட்டப்படவில்லை.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை

இதனை அடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள தலைஞாயிறு, இளந்தோப்பு, ஆதமங்கலம், பட்டவர்த்தி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் 800க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பெண்கள் உட்பட ஏராளமானோர் முன்னறிவிப்பின்றி ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பேரணியாக வந்த பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஊர் முக்கியஸ்தர்களை மனு அளிக்க அனுமதித்தனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸிடம் கோரிக்கை மனுவினை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டால் இரு தரப்பு மோதல் ஏற்படும் எனவும் , குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வினை தடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை திருப்பி அளிப்போம் என தெரிவித்தனர். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் பொதுமக்களிடம் உறுதியளித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் அரசு ஆவணங்களை காட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.