2022-ல் 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்...

நாகை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் கைதான 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக நாகை எஸ்பி ஜவஹர் தகவல் அளித்துள்ளார்.

2022-ல் 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்...

2023 ஆம் ஆண்டின் தொடக்க நாளான இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நாகை எஸ்பி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நாகை மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிக்கப்பட்டு, 68 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இரண்டு படகுகள், 4 நான்கு சக்கர வாகனங்கள் , 2 மூன்று சக்கர வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

என தெரிவித்தார். மேலும், கடத்தலில் ஈடுபட்ட 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகையுடன் முடக்கப்பட்டு இருப்பதாக கூறினார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்து இருப்பதாக கூறிய எஸ்பி ஜவஹர், திருட்டு வழக்குகள் 80 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

மேலும், களவு போன 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் வாகன விபத்தில் ஈடுபட்ட 1123  நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறிய எஸ்பி பாதுகாப்பான புத்தாண்டு அமைய நாகை மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தாண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள்...! தகவல் வெளியிட்ட மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ...!