கேபிள் ஆபரேட்டர்கள் சாலை மறியல்...மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை...

கேபிள் ஆபரேட்டர்கள் சாலை மறியல்...மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை...

அரசு கேபிள் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் : 

தமிழகம் முழுவதும் தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை பராமரித்து வந்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக சேவை மென்பொருளை செயலிழப்பு செய்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கேபிள் சேவை முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் கேபிள் சேவை மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகளை விரைந்து சரி செய்து பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேபிள் ஆபரேட்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சேலம் டவுன் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட கேபிள் ஆபரேட்டர்களை அதிரடியாக கைது செய்தனர் இதன் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது 

இதற்கிடையே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சரி செய்து விரைவில் பொதுமக்களுக்கு கேபிள் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்களும், கேபிள் ஆபரேட்டர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.