நீர்த்தேக்கத் தொட்டியை சேதப்படுத்தியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்...

நீர்த்தேக்கத் தொட்டியை சேதப்படுத்தியதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்...
Published on
Updated on
2 min read

நாமக்கல் அருகே ஊராட்சி மன்ற தலைவர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சேதப்படுத்தியதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பரபரப்பு நிலவியது.


நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ரெட்டியார் தெருவில் உள்ள பொதுமக்களின் தேவைக்காக  60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.  

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரெட்டியார் தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் மற்றும் சிலர் தன்னிச்சையாக தொட்டியின் உள்ளே இறங்கி ட்ரில்லர் இயந்திரம் கொண்டு நான்கு இடங்களில் துளையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொட்டியில் நீரேற்றம் செய்ய முடியாததால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவதியடைந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். ஆனால் புகார் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சிலுவம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அங்கு வந்த நல்லிபாளையம் போலீசார் அவர்களை சமாதானம் செய்ததின் பேரில் மறியலை கைவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com