அதிகாலை முதலே தொடர் மழை... மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் பலமாகவும் பல இடங்களில் மிதமாகவும் மழை பெய்து வருகிறது.
மேலும், ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிகாலை முதல் நல்ல மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் நகரில் மிதமான மழை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காலை மழையால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். காலை நேரத்தில் பெய்த மழையால் சாலையோர வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
மேலும் படிக்க | சாலைகளில் கரைபுரண்டோடிய மழைநீர்... அவதிக்குள்ளான மக்கள்...
எப்போது வேலை செய்தாலும் நாங்கள் தானே செய்ய வேண்டும் என மழை நனைந்தபடியே நகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடக்கும் குப்பைகளை அகற்றினர்.
தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்பவர்கள் குடை பிடித்தபடியே நடந்து சென்றனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில் குடை பிடித்தபடி சோகத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு நடந்து சென்றனர்.
சில பள்ளி குழந்தைகள் சாலையோரத்தில் தேங்கிய தண்ணீரில் விளையாடிய படியே பள்ளிக்கு சென்றனர். எதிர்பாராத மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் வெயிலின் தாக்கமில்லாமல் வானம் மந்தாரமாக இருந்ததால் மக்கள் ரசித்தபடியே சாலைகளில் நடந்து சென்றனர்.
மேலும் படிக்க | 20 வருடங்களுக்கு பிறகு கொட்டும் மழையில் மீன்பிடி திருவிழா...