வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள்...! வீசிச்சென்றவர்கள் குறித்து விசாரணை...!

வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கிகள்...! வீசிச்சென்றவர்கள் குறித்து விசாரணை...!

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக நாட்டுத்துப்பாக்கிகள் அதிகளவு புழக்கத்திலிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் மலை அடிவார கிராமங்களில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் எனவும், அவ்வாறு உரிமம் இல்லாத துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல் துறையினர் வனத்துறையினருடன் இணைந்து வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்களுடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த சில தினங்களாக ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து தொப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கஸ்தூரிகோம்பை கிராமத்தில் உள்ள அனுமன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 4 நாட்டுத்துப்பாக்கிகள் இருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற தொப்பூர் காவல் துறையினர், 4 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், தொப்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வனபகுதியில்  நாட்டு துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து இதே பகுதியில் உள்ள வனத்தில் கடந்த மாதம், 4 நாட்டு துப்பாக்கிகள் காவல் துறையினரால் கண்டுபிடிக்கபட்ட நிலையில் தற்போது கண்டுபிடித்த 4 நாட்டு துப்பாக்கிகளையும் சேர்த்து 8 நாட்டு துப்பாக்கிகள் காவல் துறையினரால் கைப்பற்றபட்டுள்ளது குறிப்பிடதக்கது.