10 நாட்களாக நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்... மெத்தனப்போக்கில் மின்வாரியம்

மின்வாரியத்தின் மெத்தனபோக்கால் 10 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

10 நாட்களாக நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகம்... மெத்தனப்போக்கில் மின்வாரியம்

கிருஷ்ணகிரி | போச்சம்பள்ளி அடுத்த, அரசம்பட்டி தென்பெண்ணை ஆறு குடிநீர் திட்டத்தின் மூலம் போச்சம்பள்ளி, புளியம்பட்டி, அங்கம்பட்டி, 7ம் அணி காவலர் குடியிருப்பு பகுதி, களர்பதி, மத்தூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் தென்பெண்ணை ஆறு குடிநீர் நீரேற்று நிலையத்தின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகியது.

ஆனால், குடிநீர் வாரியம் மூலம் பலமுறை புகார் அளித்தும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இந்த டிரான்ஸ்பார்மரிலிருந்து அரசம்பட்டி ஊராட்சிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் பம்பு அறைகளுக்கும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்காமல் இருந்து வருகிறது.

மேலும் படிக்க | அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள்...

அரசம்பட்டி ஊராட்சி தலைவரின் நடவடிக்கையால் டிரான்ஸ்பார்மர் பராமரிப்பிற்காக கழற்றி பராமரிப்பு செய்து பொருத்தப்பட்ட நிலையில் டிரான்ஸ்பார்மர் உபயோகிக்க முடியாமல் மீண்டும்  பழுதாகி உள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த, 10 நாட்களாக குடிநீர் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து குடிநீர் வினியோக உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு, எங்கள் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வினியோகிப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. டிரான்ஸ்பார்மர் பழுதே காரணம். இதுசம்மந்தமாக பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா கூறுகையில், டிரான்ஸ்பார்மர் பழுது பற்றிய தகவல் நேற்று தான் எனக்கு தெரியும். விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்து கொடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஆசிரியரை தாக்கிய மாணவரின் குடும்பம்... அனைவரையும் கைது செய்ய போராட்டம்...