மூன்றாவது நாளாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு..! முக்கொம்பு மேலணைக்கு திறந்துவிப்பட்ட தண்ணீர்

மூன்றாவது நாளாக  கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு..! முக்கொம்பு மேலணைக்கு திறந்துவிப்பட்ட தண்ணீர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. நீரானது நேற்று  வினாடிக்கு சுமார் 2 லட்சம் கனஅடிக்கு மேல் மேட்டூர் அணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அங்கு திறக்கப்படும் தண்ணீருடன் பவானிசாகர் மற்றும் அமராவதி ஆறுகளில் வரும் தண்ணீரும் சேர்ந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் முக்கொம்பு வந்தடைகிறது.

நேற்று பிற்பகல் நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு 2 லட்சத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து 2,14,750 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் காவிரியில் 72 ஆயிரம் கன அடியும், எஞ்சிய உபரி நீர் 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலும், கிளை வாய்க்காலில் 750 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது, இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதுடன், கரையோரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.