அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி...! வெளியான வாக்குமூல வீடியோவால் பரபரப்பு...!

அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி...! வெளியான வாக்குமூல வீடியோவால் பரபரப்பு...!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த குமார் - சங்கீதா தம்பதியின் 15 வயது மகள் 10 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி நேற்று மதியம் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து தலை, கால், இடுப்பில் படுகாயம் அடைந்துள்ளார். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் திடீர் திருப்பமாக அந்த மாணவியின் வாக்குமூல வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. மாணவிகள் நடன நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியுள்ளார். அப்போது அந்தப் பெண் செல்போனை கொடுத்து வீடியோ எடுக்க சொல்லி உள்ளார்.

அதன் பேரில் இந்த மாணவி வீடியோ எடுத்ததாகவும், அப்போது பெண் ஆசிரியர் ஒருவர் செல்போனைப் பெற்றுக் கொண்டு செல்போன் யாருடையது, யார் இந்த பெண்ணை வீடியோ எடுக்கச் சொன்னது என அனைத்து மாணவர்களுக்கும் முன்பாக ஆசிரியர் கேட்டு தன்னைத் தவறாக நினைத்து  திட்டி உள்ளதாகவும்,  மேலும் சக பள்ளியில் பயிலும் மாணவிகள் தன்னை தவறாக நினைத்து தன்னுடன் சேரக்கூடாது என்று கூறியதால் மன வேதனையடைந்து முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பள்ளி மாணவி முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததற்கு காரணம் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு உள்ளதால் அடிக்கடி மயக்கமடைந்து வருவதாகவும், அதுபோல்தான் நேற்று மயக்கம் ஏற்பட்டு முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக பள்ளி தரப்பில் தெரிவித்தனர். மேலும் இதில் விசாரணை மேற்கொண்ட லாலாபேட்டை போலீசாரும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மாணவி மயக்கம் அடைந்து மாடியில் இருந்து விழுந்து உள்ளதாகவும் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்போது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் கேலி கிண்டல் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றதாக வெளியிட்டுள்ள வாக்குமூல வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஈபிஎஸ்சிடம் பேச்சு போட்ட பாஜக மேலிடம்...அமைதி ஆன எடப்பாடி!