கிராபைட் தொழிற்ச்சாலை கழிவு..! 500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு...!! விவசாயிகள் வேதனை...!!! 

கிராபைட் தொழிற்ச்சாலை கழிவு..! 500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு...!! விவசாயிகள் வேதனை...!!! 

கிராபைட் தொழிற்ச்சாலை கழிவுகளால் 500 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைந்ததால் வாழ்வாதாரத்தை இழந்து  விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், கோமாளிபட்டி அருகே கிராபைட் தொழிற்ச்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் 500 ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் இரண்டு அடி உயரத்திற்கு பரவி காய்ந்து நிற்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையை சந்தித்து வருகின்றனர்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கீழ் சிவகங்கையை அடுத்துள்ள கோமாளிபட்டி கிராமத்தில் கிராபைட் சுத்திகரிப்பு தொழிற்ச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்ச்சாலையிலிருந்து தினசரி பல லட்சம் டன் கழிவு மணல்கள் தண்ணீருடன் கலந்து வெளியேற்றப்படுகிறது.

இவைகளை ஆலை நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தாமல் இந்த ஆலையை சுற்றியுள்ள வாகுலத்துப்பட்டி, சக்கந்தி குமாரபட்டி, பாசாங்கரை, காராமோடை, மீனாட்சிபுரம், உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் திறந்துவிடுகிறது. அந்த கழிவுகள் நாளுக்கு நாள் பரவி விவசாய நிலங்களில் இரண்டு அடி உயரத்திற்கு தங்கி வெயிலுக்கு காய்ந்து விரிசல் ஏற்பட்டு வறண்ட பாலைவனம் போல் காணப்படுவதுடன் அந்த கழிவு டைல்ஸ் போல் கடினமாக காணப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய கினறுகளிலும் இந்த கழிவுகள் இறங்கி பாழ்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தண்ணீரையும் பயன்படுத்த முடியாமல் தினறி வருகின்றனர். மேலும் இந்த கழிவுகள் பரவிய இடத்தின் அருகேவுள்ள விவசாய நிலங்களில் விதைக்கப்படும் கடலை, பூக்கள் என அனைத்தும்  கருகிவிடுவதால் சுற்றியுள்ள பகுதி முழுவதும் விவசாய நிலத்தையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில் ஆலை நிர்வாகத்தினர் அலட்சியமாக பதிலளிப்பதாக தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும்  தங்களது பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.