நானும் ஒரு மீனவன் என்பதில் பெருமையடைகிறேன் - அமைச்சர் மா.சு

விவசாயிகளுக்கு பசுமை திட்டம் போல், மீனவர்களுக்கு நீல திட்டம் கொண்டு வரப்படும், நெல் போல் மீனுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.

நானும் ஒரு மீனவன் என்பதில் பெருமையடைகிறேன் - அமைச்சர் மா.சு

மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி

உலக மீனவர் தினத்தையொட்டி சென்னை கொட்டிவாக்கம் மீனவ குப்பம் கடற்கரையில் திமுக சார்பில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் எம்.பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.

சாதி மதம் பார்த்து பேசுபவன் இல்லை நான்

நலத்திட்டங்களை வழங்கிய பின்பு மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், உலகளவில் 25 சதவீத புரோட்டின் மீன்களில் இருந்து கிடைக்கிறது. 25 வருடமாக நான் ஒரு நீரிழிவு நோயாளி, தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் இதுவரை கண்ணாடி அணிவதில்லை. நானும் ஒரு மீனவன் என்பதில் பெருமையடைகிறேன். கடலில் அல்ல, ஏரி, குட்டைகளில் மீன் பிடிப்பவர்கள் நாங்கள்.

நான் பொதுவாக சாதி மதம் பார்த்து பேசுபவன் இல்லை என தனது வாழ்க்கை வரலாற்றை மீனவர்களுடன் பகிர்ந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

என்னை வாழ வைத்தவர் கலைஞர்

அம்மா இறந்ததால் என்னை பிழைப்பிற்காக தந்தை சென்னைக்கு அனுப்பினார். சென்னையில் திமுகவில் சேர்ந்தேன், கலைஞர் என்னை வாழ வைத்தார். மீனவனாக பிறந்த நான், மேயராக வளர்ந்தேன். தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ளேன், இது பின்தங்கிய சமுதாயத்திற்கு கிடைத்த வாய்ப்பாக நான் உணர்கிறேன்.

கலைஞர் நினைவு படகு போட்டி

ஊரூர் முதல் உத்தண்டி வரை 13 மீனவ குப்பங்கள் உள்ளன, தமிழ்நாடு மீனவ குப்பங்களை ஒருங்கிணைத்து கலைஞர் நினைவு படகு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மிக சிறப்பாக நடக்கவிருக்கும் இந்த போட்டியில் முதல்வர் கலந்துகொண்டு பரிசு வழங்குவார்.

யார் யாரோ மீனவ நண்பன் என்கிறார்கள்

மீனவர்களுக்கு முதன் முதலில் கூட்டுறவு சங்கம் அமைத்து கொடுத்தது திமுக. ஆனால், தற்போது நாங்கள் தான் மீனவ நண்பன் என்று யார் யாரோ சொல்லிக் கொள்கின்றனர். மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தது திமுக தான்.

மேலும் படிக்க: இலவச மின் இணைப்புக்கு ஆதார் கட்டயமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மீன்பிடி தடைகாலம், மீனவர்கள் காணாமல் போனால் நிதியுதவி, மீனவர்கள் நலவாரியம், கான்கிரிட் வீடு, சுனாமியின் போது பேரிடர் கால நிதி, கூட்டுறவு சங்கம் கடன் 96 ஆயிரம் கோடி ரத்து உள்ளிட்ட நல திட்டங்களை கலைஞர் மீனவர்களுக்காக செய்திருக்கிறார். 

வருகிறது நீல திட்டம்

தற்போது மீனவ படகிற்கு நான்கு வருடத்திற்கு ஒரு முறை மானியம் வழங்கப்படுகிறது, அதனை முதல்வர் இரண்டு ஆண்டாக குறைக்க திட்டமிட்டு வருகிறார். விவசாயிகளுக்கு பசுமை திட்டம் போல், மீனவர்களுக்கு நீல திட்டம் கொண்டு வரப்படும், நெல் போல் மீனுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படும். மீனவ பல்கலைகழகத்தில் 5 சதவீதம் மீனவர்களுக்கு ஓதுக்கீடு செய்யப்படும் என அமச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

உடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், 15வது மண்டலக்குழு தலைவர் வி.இ.மதியழகன், மாமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சோமு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட திமுகவினர் இருந்தனர்.