ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் - ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் - ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவானது வருகிற 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் 16ஆம் தேதி பாலமேடு கிராமத்திலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெற உள்ளன. இதில் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது பிரபலமானது. இந்த ஜல்லிக்கட்டு விழாக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளன. 

அதன்படி காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதற்கான பணிகளை துவக்கி உள்ளனர். முதல் கட்டமாக பாதுகாப்பு பணிகள் குறித்து மதுரை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதி, ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்ப்பதற்கு முன்பாக கொண்டு வந்து சேரும் இடம், அதனை தொடர்ந்து வரிசைப்படுத்தி கொண்டுவரும் பகுதிகள், மேலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடம் என அனைத்து இடங்களையும் பார்வையிட்ட எஸ்பி அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்று சேரும் கலெக்சன் பாயிண்ட் எனப்படும் பகுதியையும் பார்வையிட்டார். மேலும் ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களுக்கு உடற்பரிசோதனை செய்யும் இடம் மற்றும் ஜல்லிக்கட்டு விழாவில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை கொடுக்கும் இடம் என அனைத்து இடங்களையும் அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி தற்போது முதல் கட்ட ஆய்வு பணியை துவக்கி உள்ளதாகவும் இன்னும் நான்கு தினங்களில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  மேலும் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் பாதுகாப்பு பணியில் பாலமேடு ஜல்லிக்கட்டு பொறுத்த வரை சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகளையும் மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிக்க : மருத்துவ கழிவுகளை கொட்ட முயன்ற வாகனம் சிறை பிடிப்பு...!