விமர்சையாக தொடங்கிய கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்....!!!

விமர்சையாக தொடங்கிய கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம்....!!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.   இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போதும் கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள். 

நாயன்மார்கள் வீதியுலா:

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி வீதிஉலா தினசரி நடைபெற்று வருகிறது , பங்குனி பெருவிழாவின் பிரசித்தி பெற்ற அதிகார நந்தி சேவை கடந்த 30 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று திருத்தேரோட்டமும் நாளை 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

திருத்தேரோட்டம்:

தற்போது கோயிலை சுற்றி நான்கு மாட வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.  

இதையொட்டி, காலை 7.00  மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். காலை 7.25 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது. வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.  மாடவீதிகளில் வலம்வந்த தேர், பிற்பகல் 1.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது.  

பாதுகாப்பு பணி:

ஒரு இணை ஆணையா், 5 துணை ஆணையா்கள் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் , ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோவிலைச் சுற்றி 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  

14 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் விரைந்து முதலுதவி சிகிச்சையளிக்க வசதியாக மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 2 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வாகனங்களும் கோவிலை சுற்றி தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:   ரத்து செய்யப்பட்ட முதலமைச்சரின் நிகழ்ச்சிகள்...காரணம் என்ன?!