காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்...

தன்னை வைத்து தனது தந்தையிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததாக கூறி கடத்தப்பட்ட பெண் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல்...

தென்காசி | இலஞ்சி கொட்டாகுளம் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட வினீத் - கிருத்திகா தம்பதியினரை பிரித்து கிருத்திகாவை அவரது பெற்றோர்கள் கடத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவை வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அறங்கேறி வரும் சூழலில், கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படை போலீசார் தற்போது குஜராத் விரைந்து அங்கு கிருத்திகாவை தேடி வருகின்றனர்.

இந்த சூழலில், குஜராத் பகுதியில் உள்ள ஒரு கோவில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினரான மேத்ரிக் பட்டேல் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கிருத்திகா பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. 'அதில் தன் விருப்பப்படியே தனது பெற்றோர் உடன் இருப்பதாக கிருத்திகா தெரிவித்த சூழலில், நேற்று கிருத்திகாவும், வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது.

இப்படி, நாளுக்கு நாள் இந்த வழக்கில் பல்வேறு பரப்பரப்புகள் அரங்கேறி வரும் சூழலில், தற்போது மீண்டும் கிருத்திகா ஒரு வீடியோவை பதிவிட்டு அவரது வழக்கறிஞர்கள் மூலமாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், வினீத்தின் குடும்பத்தார் என்னை வைத்து எனது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட தான் தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும், அதனால்தான் தனது பெற்றோர்கள் தன்னை அழைத்து சென்றதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ள சூழலில், பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com