
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே புத்திரன்கோட்டை என்ற பகுதிக்கு புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடிக்கி சோதனை செய்ததில் 36 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் கார் ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பெயர் நாகராஜ் என்பதும் புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நாளை காந்தி ஜெயந்தி என்பதால் தமிழகத்தில் மது கடைகளுக்கு முழு விடுமுறை. அதனால் குறைந்த விலை மதுபாட்டில்களை புதுச்சேரியிலிருந்து தமிழக எல்லைக்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்து கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், கடத்தி வரப்பட்ட 36 பெட்டிகளில் இருந்த 1776 மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.