மூன்று தலைமுறை வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கிய நகராட்சி...!!!

மூன்று தலைமுறை வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கிய நகராட்சி...!!!

மூன்று தலைமுறைகளாக உதகை நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளில் வசித்து வரும் சுமார் 100 குடும்பங்களை உடனே காலி செய்ய வேண்டுமென உதகை நகராட்சி நோட்டீஸ் வழங்கியதால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் காந்தல், பட்பயர், மத்திய பேருந்து நிலையம், பீட்டர்ஸ் சாலை மற்றும் R.K.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால், உதகை நகராட்சியின் வளர்ச்சிக்காக அரை ( 1/2 ) சென்ட் முதல் ஒரு சென்ட் வரையிலான வீடுகள் கட்டப்பட்டு, அதில் பொது மக்கள் தங்கி 25 பைசா முதல் 50 பைசா வரை வாடகை பணம் வசூலிக்கப்பட்டது. 

சுதந்திரத்திற்கு பின்னர் அந்த வீடுகளை பராமரித்து கொண்டு வாடகை வசூலித்துக் கொள்ளலாம் என நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.  அதே போல் 1960-ம் ஆண்டு உதகை அருகே பட்பயர் பகுதியில் 55 வீடுகள் நகராட்சியால் கட்டப்பட்டு தண்டோரா மூலம் 30 ரூபாய்க்கு வீடுகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.  தற்போது ரூபாய் 60 முதல் 975 ரூபாய் வரை நகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் உதகை நகராட்சி கடந்த மாதம் குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கியது.   மேலும் தற்போது குடியிருந்து வரும் வீடுகளை தங்களின் சொந்த பணத்திலிருந்தே பராமரித்து வருவதாகவும், தங்களின் வீடுகளுக்கு இதுவரை கழிப்பறை, குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகம் காலி செய்ய வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதனை தொடர்ந்து, மூன்று தலை முறைகளாக வசித்து வரும் மக்கள், என்ன செய்வதன்று தெரியாமல் நிற்பதாகவும் காலகாலமாக வசித்து வரும் தங்களை காலி செய்யக் கூடாது எனவும் நகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் பல வருடங்களாக வசித்து வரும் நபர்களுக்கே குடியிருப்புகளை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:  வங்கியை ஏமாற்றி ஒரு கோடியை சுருட்டிய பெண்... வங்கியில் மாட்டியது எப்படி?!!