அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனரை தாக்கிய மர்ம கும்பல்...! வலைவீசி தேடி வரும் போலீசார்...!

அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுனரை தாக்கிய மர்ம கும்பல்...! வலைவீசி தேடி வரும் போலீசார்...!
Published on
Updated on
1 min read

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அரசுப்பேருந்து ஒன்று ஆனந்தூரில் இருந்து  பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவாடானை செல்வதற்காக கப்பகுடி தரைப்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மது அருந்திவிட்டு கையில் கண்ணாடி பாட்டில்களுடன் பேருந்தை பின் தொடர்ந்து இரண்டு பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் பேருந்தை வழிமறித்து கையில் வைத்திருந்த கண்ணாடி பாட்டில்களால் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு டிரைவரையும் கண்ணாடி பாட்டில்களால் தாக்கி படுகாயப்படுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். அப்போது பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடியுள்ளனர். 

இதில் படுகாயம் அடைந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் கரவளத்தி பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் (43) என்பவரை மீட்டு சிகிச்சைக்காக ஆனந்தூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான 6 பேர் கொண்ட மர்மக்கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com