சுற்றுலா பயணிகளிடம் இருந்து 1 டன் ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்த அதிகாரிகள்...

தொடர் விடுமுறையில், கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து சுமார் 1 டன் ப்ளாஸ்டிக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளிடம் இருந்து 1 டன் ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்த அதிகாரிகள்...

நீலகிரி | மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் மற்றும் மட்காத பேப்பர் டம்ளர், தட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் என 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | மனித நரம்புகளில் கிடைத்த ‘மைக்ரோ’ ப்ளாஸ்டிக் துகள்கள்...

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிந்திருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | இந்த அழகுல இவங்களுக்கு கேஷ்மீர் கேக்குதாம்... - கேளி செய்யும் நெட்டிசன்கள்!

வார விடுமுறையான சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக கூடலூர் வட்டாட்சியர், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுற்றுலாப் பணிகளிடம் இருந்து ஒரு டன் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்களின் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதிக்குள் வீசக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க | ப்ளாஸ்டிக் பேரலில் மீட்கப்பட்ட பெண் சடலம்... ரயில் நிலையத்தில் பரபரப்பு...