மண்ணில் புதைந்த புடைப்பு சிற்பங்கள்... மலை அடிவார பகுதியில் கண்டெடுப்பு...!!!

 மண்ணில் புதைந்த புடைப்பு சிற்பங்கள்... மலை அடிவார பகுதியில் கண்டெடுப்பு...!!!

மண்ணில் புதைந்த 16ம் நூற்றாண்டை சேர்ந்த புடைப்பு சிற்பங்கள் வேலூர் மாவட்டம் ரங்கம்பேட்டை மலை அடிவார பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப்பல்லி பஞ்சாயத்திற்குட்பட்ட  ரங்கம்பேட்டை பகுதியில் மலை அடிவாரத்தில் மண்ணில் புதைந்து கிடந்த புடைப்பு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அக்கிராம மக்கள் மற்றும் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் பயிலும் அதே கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மூலம் கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் விஜயரங்கத்திற்கு தெரிவித்தனர்.

இதை அடுத்து அவரது தலைமையில்  பேராசிரியர் ஜெயவேல் மற்றும் மாணவ மாணவிகள் 25 பேர் ரங்கம்பேட்டை கிராம மலையடிவார பகுதிக்கு சென்று இரண்டு நாட்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து முள்புதரில் மண்டி கிடந்த மூன்று நினைவுக் கற்களை கிராம மக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்தனர்.

இது குறித்து வரலாற்றுதுறை பேராசிரியர் ஜெயவேல் கூறியதாவது, "ஏறத்தாழ 400 ஆண்டுகளுக்கு முன்னர் பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து குறுநில மன்னர் ஒருவர் போருக்கு செல்வதை சித்தரிக்கும் வகையில் கனைக்கும் குதிரை அதன் மீது வாள் ஏந்தி போருக்கு செல்லும் குறுநில மன்னனை வெண்கற்ற குடை பிடித்து, வெண்சாமரம் வீசி அவரது மனைவிகள் வாழ்த்தி அனுப்புவது போல் இந்த புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன .


மன்னர்கள் அக்காலத்தில் பொதுவாக பட்டத்து இளவரசன் மற்றும் படை தளபதிகள் தான் போரை வழி நடத்தி செல்வர். ஆனால் இங்கு காணப்படும் சிற்பத்திலோ மன்னனே போரை வழிநடத்தி செல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் நாயின் புடைப்பு சிற்பம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிற்பத்தில் அரச குல பெண்கள் இரண்டு பேரில் ஒருவர் பெண் கிளியை தன் கையில் ஏந்தியவாறு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.


குறுநில மன்னர்கள் இறந்த பிறகு அவருடைய மகனான பட்டத்து இளவரசன் போரை வழிநடத்தி செல்கிறார் அவனது மனைவிகள் வெண்கொற்றக் குடையுடன் வெண்சாமரம் வீசி வாழ்த்தி அனுப்பி வைப்பது போல் அக்கால மன்னரின் வாரிசுகளின் வீரத்தினை பறைசாற்றும் வகையில் உள்ளது.


மேலும் இதன் அருகில் பழங்காலத்திலான அக்னி குண்டம் ஒன்றும் காணப்படுகிறது. இதை பார்க்கும்போது போரில் வீர மரணம் அடைந்த மன்னன், இளவரசன், படை வீரர்கள் ஆகியோரின் மனைவிகள் தங்கள் உயிரை அக்னி குண்டத்தில் மாய்த்து இறந்ததாக கிராம மக்கள் செவி வழி தகவலாக கூறுகின்றனர்.


 

இதேபோல் ஆங்காங்கு கிடைக்கும் சிற்பங்கள் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அவற்றின் வரலாறுகள் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது" என தெரிவித்தார்.