கொடைக்கானலுக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை...!!

கொடைக்கானலுக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை...!!

கொடைக்கானலுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சுற்றுலாப்  பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் துவங்க  உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்து வசதி இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வசதி உள்ள சுற்றுலா பயணிகள் தனி கார்கள் மூலம் கொடைக்கானல் வந்து செல்லும் நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை கவனத்தில் கொண்டு கொடைக்கானலுக்கு கூடுதல் சுற்றுலா பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை- திண்டுக்கல்-  தேனி - பழனி-மற்றும் சென்னை- பெங்களூர்  ஆகிய மாநகர  பகுதிகளில் இருந்தும் கூடுதல் பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை இயக்க வேண்டும் என்றும் குறிப்பாக வழக்கமான பேருந்துகள் இயக்கப்படாத நேரத்தில் இந்த கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் மேலும் கூடுதலான பேருந்துகளை அரசு இயக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதுபோலவே எதிர்வரும் 15 ஆம் தேதியில் இருந்து கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றிப் பார்க்க இயற்கை எழில் காட்சி பேருந்தையும் அரசு போக்குவரத்து கழகம் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.