சீர்காழி : மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட தமிழக பா.ஜ.க தலைவர்...!

சீர்காழி : மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட தமிழக பா.ஜ.க தலைவர்...!
வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல் சீர்காழி தாலுக்கா பகுதியில் கடந்த 11ஆம் தேதி இடியுடன் கூடிய அதி கனமழை பெய்தது. இந்த மழையால் வீடுகள் மற்றும் விளை நிலங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.  சீர்காழியில் 44 சென்டிமீட்டர், கொள்ளிடத்தில் 32 சென்டிமீட்டர் மழை அளவு பதிவானது.  

இந்த மழையால் பதிக்கபட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை கடந்த 14 - ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் ஒவ்வொருவருக்கும் நிவாரண உதவியாக ரூபாய் 1000 வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். 
இந்நிலையில் தற்போது பாதிப்புகள் குறித்து பார்வையிடவும் நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். கொள்ளிடம் ஒன்றியம் கொடிக்கால் வெளி கிராமத்தில் கனமழையால் 120 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் உட்பகுந்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பாதிப்படைந்துள்ளன. பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்ட அவர் பாதிப்புகள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து நூறு பேருக்கு அரிசி, காய்கறி, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அடுத்ததாக நல்லூர் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட விவசாய விளை நிலங்களை பார்வையிட்டார். தொடர்ந்து திருவெண்காடு பகுதியில் 2000 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர், பூம்புகார் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பார்வையிட்டார்.

இதையும் படிக்க : புத்திமதி சொன்ன தலைமை ஆசிரியர்... கஞ்சா போதையில் குத்திக் கிழித்த மாணவன்...