ஆண்டுக்கு இருமுறை மட்டுமே பூக்கும் 'ஸ்பேத்தோடியம் கேம்பனுலேட்டா'...! சுற்றுலா பயணிகள் ஆர்வம்...!

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே பூக்கும் 'ஸ்பேத்தோடியம் கேம்பனுலேட்டா'...! சுற்றுலா பயணிகள் ஆர்வம்...!

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு தாவரங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு நடவு செய்யப்பட்டன. இவற்றில் சில மரங்களில் பூக்கும் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஒரே சமயத்தில் இந்த மலர்கள் பூக்காமல், ஒவ்வொரு சீசனிலும், அதாவது வேறுபட்ட மாதங்களில் பூப்பதால், சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

இந்தநிலையில் நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சாலையோரங்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் ஸ்பேத்தோடியம் கேம்பனுலேட்டா எனப்படும் சேவல் கொண்டை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

ஆண்டிற்கு இரு முறை பூக்கும் இந்த மலர்கள், தற்போது சிவப்பு நிறத்தில் பூத்துள்ளது. குறிப்பாக கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டபெட்டு பகுதியிலும், கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரங்களிலும் இந்த மலர்கள் பூத்துள்ளன. இந்த மலர்கள் காண்போரின் மனதை கொள்ளை கொள்கிறது. மேலும் இந்த மலர்கள் உதிர்ந்து சாலைகளில் கொட்டிக்கிடக்கின்றன. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அழகிய சேவல் கொண்டை மலர்களைக் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.