சுத்தமான காற்றுக்கு போராடும் கிராமம்... செவி சாய்க்குமா அரசு?

தேன்கனிகோட்டை அருகே கல்குவாரிக்கு எதிராக கொரட்டகிரி கிராம மக்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுத்தமான காற்றுக்கு போராடும் கிராமம்...  செவி சாய்க்குமா அரசு?

கிறீச்சிடும் சத்தத்துடன் தடதடவென விரையும் லாரிகள் மற்றும் கண்களை மறைக்கும் புழுதி  காற்று சுற்றிய இடம்தான் உங்கள் வாழ்விடம் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? கேள்வி கேட்பீர்கள்... கொந்தளிப்பீர்கள்... அல்லவா? அதைத்தான் செய்கின்றனர் ஒரு கிராமத்தினர்.

கிருஷ்ணகிரி : தேன்கனிகோட்டை அருகே அமைந்துள்ள கொரட்டகிரி கிராமத்தின் நிலைதான் முன்பு கூறியது.

மேலும் படிக்க | தொண்டர்களை கன்னத்தில் அறைந்த கே.எஸ்.அழகிரி..! ரணகளமான சத்தியமூர்த்தி பவன்..!

நடந்து கடந்தால் அரைமணி நேரம் தான், ஆனால் இந்த கிராமத்தில் ஆறு கல்குவாரிகள் இருக்கின்றன. அதில், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்டவற்றை ஏற்றிக் கொண்டு  நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் செல்வது குறிப்பிடத்தக்கது. 6 கல் குவாரிகளுக்கும் கொரட்டகிரி கிராமத்தின் வழியாகவே லாரிகள் கடந்து செல்வதால் வீட்டை விட்டு வாசலில் கால் வைக்கவே அஞ்சுகின்றனர் இங்கு வசிக்கும் கிராமவாசிகள்.

கல்குவாரிக்கு செல்லும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்ல அனுமதிக்க கூடாது. மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என இந்த கொரட்டகிரி  கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மேலும் படிக்க | அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை...!

இனி இந்த கிராமத்தில் நம்மால் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட கிராம மக்கள், கடந்த 11-ம் தேதி ஊரை காலி செய்து, ஆட்சியர் அலுவலகத்தில் குடிபெயரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டம் ஏன்றால் ஏதோ ஒரு சில மக்கள் மட்டும் சென்று ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராடும் போராட்டம் அல்ல. கிராமத்தை சேர்ந்த முதியவர்கள், பெண்கள், ஆண்கள், இளம் பெண்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர், குழந்தைகள், ஆடுகள், மாடுகள் என அனைவரும்  பாத்திரம், பண்டங்களுடன் மூட்டை, முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு, கொட்டும் மழையிலும் ஊரை காலி செய்தனர். 

மேலும் படிக்க | ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்...தேதி அறிவித்தது இந்திய கம்யூனிஸ்ட்!

பின், சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலத்தில் கூடாரங்கள் அமைத்து, அங்கேயே சமைத்து உண்டு, உறங்கி வருகின்றனர். சுத்தமான காற்றும், பாதுகாப்பான வாழ்க்கையும் கேட்டு, பாதுகாப்பற்ற சூழலில் 5-வது நாளாக இவர்களின் போராட்டம் தொடர்கிறது. 

சுத்தமான காற்றும், சுகாதாரமான வாழ்வும் கேட்டு போராடும் இந்த கிராம மக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒருபுறம் கல்குவாரி மறுபுறம் கல்நெஞ்ச அதிகாரிகள், என்ன செய்யப்போகிறது அரசு என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர் கொரட்டகிரி மக்கள்...

மாலை முரசு செய்திகளுக்காக, ஓசூர் செய்தியாளர் கோபாலுடன், தேன்கனிகோட்டை செய்தியாளர் சரவணன்...

மேலும் படிக்க | தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர் தான் கட்டணங்களை உயர்த்தினாரா?...அண்ணாமலை கேள்வி!