இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மாசித் திருவிழா கோலாகலமாக முடிந்தது...!!!

இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மாசித் திருவிழா கோலாகலமாக முடிந்தது...!!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் திருத்தேரோட்டத்தை மாலைமுரசு நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார். 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மாசித் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.  தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய இடம் திருச்செந்தூர்.  தேவர்களுக்கு இம்சைகள் தந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்த சண்முகரின் தரிசனம் வேண்டி பல நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். 

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷநாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த திருச்செந்தூரை பிரமாண்டத்தின் உச்சியில் கொண்டு சேர்ப்பதுதான் மாசித்திருவிழா.  கடந்த மாதம் 25-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசித்திருவிழாவில் பக்தர்கள் அணிதிரளாக வந்து பங்கேற்று முருகன் - தெய்வானையின் அருள் பெற்று சென்றனர்.

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளல், சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரதநாட்டியம், பட்டிமன்றம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.  மாசித்திருவிழாவின் பத்தாம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 

இதன் முக்கிய நிகழ்வாக 3 தேர்கள் பக்தர்களால் இழுக்கப்படுவது வழக்கம்.  அதன்படி முதலில் காலை 7 மணியளவில் விநாயகர் தேரானது வீதிகளில் வலம் வந்து மீண்டும் நடை சேர்ந்தது.  இதைத் தொடர்ந்து சுப்பிரமணியசாமி - தெய்வானை எழுந்தருளிய பெரிய தேரோட்டம் காலை 7. 40 மணியளவில் தொடங்கியது.  திருத்தேரை மாலைமுரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் அவர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். 

மேலும் மூன்றாவதாக தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் நான்குரத வீதிகளில் வலம் வந்ததைத் தொடர்ந்து 10 மணிக்குள் நிலைக்கு வந்து சேர்ந்தது.  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தேரோட்ட திருவிழாவானது வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதையும் படிக்க:   காதலரால் தாக்கப்பட்ட நடிகை அனிக்கா....!!