உரிய ஆவணங்களின்றி செயல்பட்ட நர்சிங் பயிற்சி மையம்...! அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்...!

உரிய ஆவணங்களின்றி செயல்பட்ட நர்சிங் பயிற்சி மையம்...!  அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்...!

சேலத்தில் உள்ள நர்சிங் பயிற்சி மையம், செயல்படுவதற்கான எந்த சான்றிதழும், ஆவணங்களும் முறையாக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்காததால், அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு சீல் வைத்தனர்.
சேலம் ஐந்து ரோடு பகுதியில் கிதியோன் என்ற தனியார் திறன் மேம்பாட்டு அமைப்பு சார்பில்  தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த  மாணவர்கள் நர்சிங், ஆசிரியர் பயிற்சி, சமையல் கலை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளில் பயின்று வந்தனர். 

இந்நிலையில் மாணவர்களுக்கு முறையாக வகுப்புகள் எடுக்கப்படவில்லை என குற்றசாட்டு எழுந்தது. நர்சிங் படிக்க 27 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்த பின்னர் அவர்களை சேலம் மாநகரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் உதவியாளர்களாகவும் மாணவிகளை பணியில் சேர்த்து விட்டுள்ளனர். இது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பியபோது, தற்போது உங்களுக்கு மருத்துவமனையில் வகுப்புகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, செய்முறை வடிவில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது எனவும், விரைவில் வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் எனவும் பயிற்சி மையத்தின் முதல்வர் விக்டோரியா தெரிவித்துள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்தை வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுகுறித்து, சேலம் சூரமங்கலம் வட்டாட்சியர் தமிழரசி மற்றும் வருவாய்த்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து பயிற்சி வழங்காமல், பல்வேறு மருத்துவமனைகளில் பணியமர்த்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் பயிற்சி நிறுவனமே பெற்றுக்கொள்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து அதிகாரிகள், பயிற்சி மையத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்று தந்தனர். பின்னர் பயிற்சி மையம் செயல்படுவதற்கான எந்தச் சான்றிதழும் ஆவணங்களும் முறையாக அதிகாரிகளிடம் சமர்ப்பிக்காததால் வட்டாட்சியர் தமிழரசி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் 18 வயதிற்கும் குறைவாக இருக்கக்கூடிய 50-க்கும் மேற்பட்ட மாணவிகளை பல்வேறு மருத்துவமனைகளுக்கு வேலைக்கு அனுப்பியது குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கட்டிய கட்டணத் தொகையை திரும்ப மாணவர்களிடம் வழங்குமாறு பயிற்சி மைய நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.