மூன்றாவது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை...!

மூன்றாவது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை...!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பன் ஷாஜி ஆண்டனி என்ற நபரை 48 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருளுடன் சோழவரம் அருகே மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்து அயப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போதே மூன்றாவது மாடியில் இருந்து ராயப்பன் குதித்துள்ளார். இதனையடுத்து அவரை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் காவல் விசாரணையில் மரணம் அடைந்ததாக வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தில் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவதாக குடும்பத்தினரிடமும் உறவினரிடமும் தெரிவித்துவிட்டு ராயப்பன் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர் மீது தெலுங்கானாவில் ஏற்கனவே ஒரு வழக்கு இருந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்த நிலையில் தனது  குடும்பத்தினருக்கு தெரிந்து விடும் என்கிற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காவல்துறை விசாரணையின் போது கைதி உயிரிழந்தால் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்