திருவண்ணாமலை : கஞ்சா போதையில் காவல்துறையினரையே மிரட்டும் சாமியார்கள்...!

திருவண்ணாமலை : கஞ்சா போதையில் காவல்துறையினரையே மிரட்டும் சாமியார்கள்...!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலின் கிரிவலப் பாதை மற்றும் கோவில் பகுதிகளில் அதிக சாமியார்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில்  மூன்று வேளைகளும் உணவு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. கிரிவலம் வரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று கிரிவலப் பாதையிலேயே குடில்கள் அமைத்து அங்கேயே தங்கி தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே கிரிவலப் பாதையில் செல்லும் ஆன்மீக பக்தர்களை சாமியார்கள், கஞ்சா மற்றும் மது போதையில் தாக்குவதும் ஒருமையில் பேசுவதும், மிரட்டி வருவதும் வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் இன்று கிரிவலப் பாதையில் உள்ள காளியம்மன் கோவில் அருகே 3 சாமியார்கள் கஞ்சா புகைத்து விட்டு கிரிவலம் செல்லும் ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட கடைக்காரர்களிடம் சாமியார்கள்  ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கஞ்சா போதையில் இருந்த சாமியார்களை தட்டி கேட்க சென்ற போது, அவர்களையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் கஞ்சா போதையில் இருந்த சாமியார்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த நான்கு தினங்களாகவே கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் இந்த மூன்று சாமியார்களும் கஞ்சா மற்றும் மது போதையில் கிரிவல பக்தர்களையும் பொதுமக்களையும் மிரட்டி வருவதாக அப்பகுதியில் திரண்ட மக்கள் கூறினர்.