தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்ட கல்லூரி மாணவி...!
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சோனியா(19) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் கல்லூரி நண்பர்களுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சுற்றி பார்க்க வந்துள்ளார். பூங்காவில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் வீடு செல்வதற்காக வண்டலூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது, தண்டவாளம் அருகே உள்ள பிளாட்பாரமில் உடன் வந்தவர்கள் ஏறி விட, சோனியா உயரம் குறைந்தவர் என்பதால், அவரால் ஏற முடியவில்லை. அதானால் தண்டவாளத்தில் நடந்து சென்று, பிளாட்பாரம் தொடங்கும் இடத்தில் ஏறி வருவதாக கூறி சுற்றி சென்றுள்ளார். அப்போது சென்னை நோக்கி வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் இருந்து பிளாட்பாரத்தில் ஏற முயன்ற சோனியா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் அடிபட்டு இருந்தார். அவர் யார் என்று விவரம் தெரியவில்லை. இந்த விபத்துக்கள் குறித்து தாம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் வைரவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த ஒரு மாதத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க பொதுமக்கள் தண்டவாளத்தில் நடந்து சென்று விபத்தில் சிக்குவதை தவிர்க்க வேண்டும் என ரயில்வே போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.