கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் என்.எல்.சி பிரச்சினை பற்றி பேச தடை விதித்த கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் என்.எல்.சி பிரச்சினை பற்றி பேச தடை விதிக்கப்பட்டது. இதனை கண்டித்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில்  என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து உழவர்கள் சிக்கல் எழுப்ப முயன்ற போது, அதற்கு கடலூர்  மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.

உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தின் நோக்கமே உழவர்களின் குறைகளை தீர்ப்பது தான். கடலூர் மாவட்ட உழவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே என்.எல். சி நிலப்பறிப்பு தான். அடிப்படை சிக்கலான என்.எல்.சி நிலப்பறிப்பு பற்றி பேசக்கூடாது என்றால், எதற்காக உழவர் குறை தீர்க்கும் கூட்டம்? என்.எல்.சி. நிலங்களை பறிக்கவில்லை என்றால், என்.எல்.சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றால், அது குறித்து விவாதிக்கவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், ஆட்சியரும் அஞ்சுவது ஏன்?  மடியில் கனமில்லை என்றால், வழியில் பயம் ஏன்?" என தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி இந்தியா நிறுவனம் இரண்டாவது யூனிட் விரிவாக்க பணிகளுக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலத்தினை தற்போது கையகப்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு பாமக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.