சேறும் சகதியுமான சாலைகள் சின்ன மழைக்கே இப்படியா? பொதுமக்கள் குமுறல்...

பொன்னேரி நகராட்சியில் பாதாளசாக்கடை பணிகள் மந்தமானதால் சாலைகளில் பள்ளங்கள் அதிகரித்திருக்கிறது. சேறும் சகதியுமாக மாறிய சாலையினால் அவதிப்படும் பொன்னேரி மக்களின் குமுறலை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு
சேறும் சகதியுமான சாலைகள் சின்ன மழைக்கே இப்படியா?  பொதுமக்கள் குமுறல்...

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு துவங்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த பொன்னேரி பகுதியில் பாதாளச்சாக்கடை அமைப்பதற்கு முன்பே திட்டமிட்டு அதற்காக சாலைகளை பெயர்த்தெடுத்து ராட்சத பள்ளங்களும் தோண்டப்பட்டது. 

கான்கிரீட் குழாய்களை பொருத்திய பின்னும், பணிகளை விரைந்து முடிக்காமல் அப்படியே விட்டு விட்டது பொன்னேரி மாநகராட்சி. தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாகவே காணப்படுகின்றன. வீட்டில் இருந்து வெளியில் கிளம்புவோர், இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளத்தில் சிக்குவது, சேற்றில் குளிப்பது தொடர்கதையாகியே வருகிறது. 

மக்கள் யாருக்கேனும் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கோ, அல்லது நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு முடியாலும் உள்ளது. இந்த பழுதடைந்த சாலையினால் ஒரு முறை ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால் ஒருவர் இறந்து போனதாகவும் தெரிவிக்கிறார் ஊர் மக்களில் ஒருவர். 

இந்த சாலை பழுதின் காரணமாக 15 கிராமங்களுக்கு செல்லும் பேருந்து சேவையும் 3 மாதத்துக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்துக்கே இப்படி நிலைமையென்றால் மேலும் இது தொடர்ந்தால் மழையினால் ஏற்படும் நோய் தொற்றில் இருந்து எப்படி பாதுகாப்பது, தங்கள் எதிர்காலம் என்னவாகும் என பொதுமக்கள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.

மூன்று வருடங்களாக முடிவடையாத பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? தார் சாலைகளை தாங்கள் கண்கொண்டு பார்ப்போமா? இல்லை இறுதி வரை சேறும் சகதியோடும்தான் வாழ்க்கை நடத்த வேண்டுமா என ஏங்கிருக்கின்றனர் பொன்னேரி மக்கள்.

- செய்தியாளர் சந்திரசேகர்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com