குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை...

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை...

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதமான சாரல் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

இதே போன்று மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அருவி நீருடன் கல் மற்றும் மரக்கட்டைகள் விழத் தொடங்கின.

மேலும் படிக்க | கார்த்திகை 2-வது சோமவாரத்தில் புனித நீராடிய சுமங்கலிகள்...

மேலும் குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவை கடந்தும், பழைய குற்றால அருவியில் தடாகம் வரையில் வெள்ளநீர் பாய்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐய்யப் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் அருவிகளில் புனித நீராடுவதற்காக வருகை தந்த ஐய்யப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்திற்கு உட்பட்ட நீர்த்தேக்கங்கள் மற்றும் சிற்றாறு, அரிஹர நதி, அனுமன் நதி, குண்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பிசான சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | 2000 கன அடியாக உயர்ந்த அணையின் நீர்வரத்து...!