கடலூர் : சிதம்பரம் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் இந்திரா நகர் உள்ளது. சிதம்பரம் நகராட்சியின் 33வது வார்டான இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து, அதன் விளைவாக இந்திராநகர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
மேலும் படிக்க | 122 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் சின்னாபின்னமாகிய சீர்காழி...!
இதனால் இந்திராநகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் வடியவில்லை. இதனால் இடுப்பளவு தண்ணீரிலேயே பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கூறிய இந்திராநகர் பகுதி மக்கள் பேசியபோது, ஒவ்வொரு முறையும் சிறு மழை வந்தாலே இந்த பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து விடுவதால், மழைக்காலங்களில் தாங்க முடியாத இன்னல்களை அனுபவித்து வருவதாக கூறினர்.
இதனால், கான்சாகிப் வாய்க்காலில் போதிய வடிகால் வசதி இல்லாததாலும், கரைகள் பலமிழந்து இருப்பதாலும்தான் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுவதாக கூறிய இப்பகுதி மக்கள், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. “எனவே கான்சாகிப் வாய்க்காலின் கரையை உயர்த்தி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.