உள்ளாட்சி தினத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டறிகிறார் முதலமைச்சர்...

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகர சபை கூட்டம் நாளை நடைப்பெறுகிறது. பம்மலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் குறைகளை கேட்டறிகிறார்.
உள்ளாட்சி தினத்தில் மக்கள் குறைகளை நேரில் கேட்டறிகிறார் முதலமைச்சர்...

தமிழகத்தில் குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி, உழைப்பாளர் தினம் மே 1ம் தேதி, சுதந்திர தினம் ஆகஸ்டு 15ம் தேதி, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2ம் தேதி, உலக நீர் நாளான மார்ச் 22ம் தேதி, உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி ஆகிய நாட்களில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கிராம சபை கூட்டங்களில் அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம். அது கூட்டத்துக்கு பிறகு தீர்த்து வைக்க ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது வழக்கம்.

இந்நிலையில் உள்ளாட்சிகளில் கிராமசபை கூட்டத்தைப்போல், நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள்தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைத்துள்ளன. 

இந்தக் கூட்டத்தில் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு அனுப்பப்படும். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், அதிகாரிகளும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் நாளை உள்ளாட்சி தினம் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் கிராமம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கூட்டம் நாளை காலை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் 6ம் வார்டில் நடைப்பெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். பின்னர், அங்குள்ள திறந்தவெளி அரங்கில் வார்டு மக்களின் குறைகளை அவர் கேட்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்.

இதே போல தமிழகம் முழுவதும் நாளை காலை கூட்டம் நடைப்பெற உள்ளது. இதில் அந்தந்த ஏரியாவில் உள்ள மக்கள் பிரதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com