எக்ஸ்கலேட்டரில் நசுங்கிய சிறுவனின் விரல்கள்... விமான நிலையத்தில் பரபரப்பு...

அந்தமான் விமானத்தில் செல்ல தாத்தா, பாட்டியுடன் வந்த 4 வயது சிறுவனின் கை விரல்கள் எக்ஸ்கலேட்டரில் நசுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எக்ஸ்கலேட்டரில் நசுங்கிய சிறுவனின் விரல்கள்... விமான நிலையத்தில் பரபரப்பு...

அந்தமானை சேர்ந்தவர் ஐசக். இவர் தீபாவளி விடுமுறையில் மனைவி மகன், பேரக்குழந்தை ஆகியோருடன் தமிழ்நாட்டில் உறவினா் வீட்டிற்கு வந்தார். விடுமுறை முடிந்த குடும்பத்துடன் அந்தமான் செல்ல  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். போா்டிங் பாஸ் வாங்கிவிட்டு பாதுகாப்பு சோதனை முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்காக எஸ்கலேட்டர் மூலம் சென்று கொண்டு இருந்தனா்.

அப்போது ஐசக்கின் 4 வயது பேரன் ஜெய் இடது கை விரல்கள்  எதிர்பாராத விதமாக எக்ஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது.  அவசர அவசரமாக விமான ஊழியர்கள் எஸ்கலேட்டரை நிறுத்தினர். அதோடு சிறுவன் ஜெய் உட்பட ஐசக்  குடும்பத்தினரை எஸ்கலேட்டர் இருந்து இறக்கினர். 

சென்னை விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து வந்து  சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால் நல்லது என பரிந்துரைத்தனர். இதையடுத்து ஐசக் தன்னுடைய குடும்பத்தினரின் அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். 

இந்த சம்பவம் காரணமாக அந்தமான் செல்ல வேண்டிய தனியாா் பயணிகள் விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com