உடல் எடை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர்...! உயிரிழந்த சோகம்...!

உடல் எடை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர்...! உயிரிழந்த சோகம்...!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் உடல் நல குறைவால் உயிரிழந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை என்பது பெரிதாகப் பேசப்படுகிறது. அதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் உடல் எடையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். சரியான உடல் எடை இருப்பவர்கள் அதனை அப்படியே பராமரித்துக்கொள்வதிலும், எடை அதிகம் இருப்பவர்கள் குறைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக உடல் எடை அதிகம் இருப்பவர்களில் சிலர் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதால் அதனை குறைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் அளவிற்கு இறங்கிவிடுகின்றனர். அதற்காக உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர், விளம்பரங்களில் வருவதைப்பார்த்து, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்துகளையும் வாங்கி உட்கொள்கின்றனர். இது போன்ற மருந்துகள், அந்த நேரத்தில் பயன் தரக்கூடியவையாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து  சிந்திப்பதில்லை. இது போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர், உடல் எடையை குறைப்பதற்காக மருத்து எடுத்துக்கொண்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.     

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் கருணீகர் தெருவை சேர்ந்தவர் பாளையம். இவருடைய மகன் சூர்யா (20). தனியார் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் இவர் மிகவும் பருமனாக இருந்ததால் தனது உடல் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடை குறைப்பதற்கான மருந்துகளை வாங்கி 10 நாட்களாக அந்த மருந்துகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் சூர்யாவுக்கு மிக வேகமாக உடல் எடை குறைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி இரவு சூர்யாவுக்கு  உடல் நிலை மோசமான நிலையில், சென்னை ராஜிவ்காந்தி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

-- சுஜிதா ஜோதி 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com