எடப்பாடி : பெருமாள் கோவில் திருவிழா...! தெப்பம் தண்ணீரில் மூழ்கி பரபரப்பு..!

எடப்பாடி : பெருமாள் கோவில் திருவிழா...! தெப்பம் தண்ணீரில் மூழ்கி பரபரப்பு..!

சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டுத்தெருவிலுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் சுவாமிகளை புரட்டாசி மாதம் மூன்றாவது வாரச்சனிக்கிழமையை முன்னிட்டு ஊர்வலமானது எடப்பாடி பெரிய ஏரியை கடந்து சென்று சூரிய மலை அடிவாரத்திலுள்ள வெள்ளூற்று பெருமாள் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடர்  மழை காரணமாக சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட எடப்பாடி பெரிய ஏரி  நிரம்பி சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு  ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் சுவாமிகளை தெப்பத்தில் எடுத்துச் செல்ல பக்தர்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேலும் மேட்டுத்தெருவிலிருந்து சுவாமிகளை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய ஏரி முதல் கரையில் தெப்பத்தில் சுவாமியை வைக்கும் போது ஆட்கள் அதிக அளவில் தெப்பத்தில் இருந்ததாலும், பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமின்றி தெப்பம் உருவாக்கப்பட்டதாலும் எதிர்பாராத விதமாக தெப்பம் தண்ணீரில் மூழ்கியது. அப்போது தெப்பத்தில் இருந்த மேளம் வாசிப்பவர்கள் உட்பட சிலர் தண்ணீரில் மூழ்கினர்.

உடனடியாக காவல்துறையினர் அங்கு இருந்தவர்களை மீட்டு மேலே வரவழைத்து பின்னர் தெப்பம் மீண்டும் தயார்படுத்தப்பட்டு குறைவான ஆட்களை மட்டும் அனுமதித்தனர். பின்னர் சுவாமியை தெப்பத்தில் வைத்து வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்று ஏரியை கடந்து பின்னர் வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். 

மேலும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இன்றி பரிசல் மூலம் தெப்பம் தயாரிக்கப்பட்டதாலும் பாதுகாப்பு உடைகள் இன்றி தெப்பத்தில் காவல்துறையினர் அதிக அளவில் ஆட்களை அனுமதித்ததாலும் இந்த விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com