விருதுநகர் | உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி புத்தாண்டு தினத்தை கொண்டாடிய பொதுமக்கள் அதிகாலை முதல் வழிபாட்டிற்கு கோவில்களில் குவிந்தனர்.
சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி சங்கரன்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலில் நாள் முழுவதும் பிரசாதம் திட்டத்தின் மூலம் வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.