போட்டிப் போட்டு சாமியாடிய பெண் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய ஆசாமி...

போட்டிப் போட்டு சாமியாடிய பெண் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய ஆசாமி...

கன்னியாகுமரி | நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்தங்கம். 48 வயதான இந்த பெண்மணி அவர்களது குடும்ப கோவிலான பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் சாமியாடுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கொடை விழாவின்போது சாமியாடி அருள்வாக்கு சொல்லிய நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவருடன் தகராறு முளைத்துள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான விஜயன் சுற்றுவட்டார பகுதி கோயில்களில் கொடை கொடுத்து சாமியாடும் இவர் கடந்த ஆண்டு பிரம்ம சக்தி கோயிலிலும் கலந்து கொண்டிருந்தார். ஏற்கெனவே பிரம்மசக்தி கோயிலில் பாலதங்கம் என்பவர் சாமியாடிக் கொண்டிருக்க, திடீரென விஜயனும் சாமியாடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

கோயில் வரிதாரராக அல்லாத ஒருவர் எப்படி சாமியாடலாம் என நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோபத்துக்குள்ளானார் விஜயன். இதையடுத்து சாமியாடி பால்தங்கத்தைப் பார்த்து அடுத்த ஆண்டு சாமியாடுவதற்கு நீ உயிருடன் இருக்க மாட்டாய் என ஆவேசமாய் தெரிவித்து வந்துள்ளார் விஜயன். இதே போன்ற பலமுறை பால்தங்கத்தைப் பார்த்து அதே வார்த்தையை தெரிவித்து வந்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் அதிகரித்தது. 

இந்த ஆண்டு கோயிலில் தான்தான் சாமியாட வேண்டும் என நினைத்தபோதும், விஜயனின் சாபம் பலிக்காமல், பால்தங்கமே சாமியாடி வந்தார். இதனால் கடும் கோபமடைந்த விஜயன், கோவில் திருவிழாவின்போது அங்கு சாதாரணமாக கலந்து கொண்டார். வழக்கம் போல திருவிழா மேளதாளத்துடன் தொடங்கி, சாமியாடி வந்தார் பால்தங்கம். 

தன்னை சாமியாடுவதற்கு மறுப்பு தெரிவித்ததால் உள்ளத்தில் பொறுமிக் கொண்டிருந்த விஜயன், ஏதாவது செய்து திருவிழாவை தடுக்க வேண்டும் என சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கு கடைக்காரர் ஒருவர், கொதிக்கும் எண்ணெயில் பலகாரம் சுட்டுக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த விஜயன், கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து சாமியாடிக் கொண்டிருந்த பால்தங்கம் மீது விர்றென்று ஊற்றினார். 

இதில் பால்தங்கம் உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டதோடு, மார்பு, கை, கால் உள்பட உடல்உறுப்புகள் பலத்த காயமடைந்தது. இதைக் கண்டு அதிர்ந்து போன மக்கள் பால்தங்கத்தை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 35 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் பால்தங்கம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார். 

பொதுவாக ஊருக்குள் மக்கள் அனைவரும் ஒன்றாக சமாதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கோவில் திருவிழாக்களை நடத்தி வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் கோயில் திருவிழாவில் ரகளை நடப்பதும், கொலை நடப்பதும் வாடிக்கையாகியே வருகிறது. அதிலும் ஊருக்குள் யார் பெரியவர்கள் என்ற போட்டியையும் தாண்டி, சாமியாடுவதிலா போட்டி உண்டாக வேண்டும்? 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com