பதற வைக்கும் பைக்காரா சாலை... சீரமைக்கப்படுமா...?

உதகை பைக்காரா படகு இல்ல சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
பதற வைக்கும் பைக்காரா சாலை... சீரமைக்கப்படுமா...?
Published on
Updated on
1 min read

நீலகிரி | உதகை என்றதும், இதமான குளிரும், பச்சை பசேலென எந்தப்பக்கம் திரும்பினாலும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் தேயிலைத்தோட்டம், அழகிய மலர்களுமே நம் நினைவுகளில் நிழலாடும். அதன் சிறப்புகளில் ஒன்றுதான் கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா அணையின், படகு இல்லம்.

கூடலூர் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம்வரை வனப்பகுதி வழியாக, பைக்காரா படகு இல்லத்துக்கு சாலை ஒன்று உள்ளது. அந்த சாலைதான் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் இந்த சர்ச்சைக்குரிய சாலை. இந்த சாலையில் செல்வதற்கு வனத்துறை சார்பில், கட்டணம் வேறு வசூலிக்கப்படுகிறது. 

நுழைவு கட்டணத்தை கட்டிவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, சாலையை பார்த்ததும் ஒழுங்காக போய் சேருவோமா என்ற அச்சம் தொற்றிக் கொள்கிறது.  ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்கிறோம் என்ற பெயரில் பள்ளங்களில் மண்ணைக் கொட்டி நிரப்பினர். ஆனால் இந்த மண் புழுதி பறப்பதால் சுற்றுலாப் பயணிகள் மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. 

இந்த சாலையில் செல்லும் வாகங்கள் தப்பித் தவறி பஞ்சர் ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டு நின்றுவிட்டாலோ, தீர்ந்தது கதை. இன்பச் சுற்றுலா துன்பத்தின் உச்சமாக மாறிவிடும். கோடை சீசனுக்கு முன் போர்க்கால அடிப்படையில், சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்கப்படுமா...? பொறுத்திருந்து பார்ப்போம்...

மாலை முரசு செய்திகளுக்காக, உதகை செய்தியாளர் சுரேஷ்..

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com