பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் பணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27 ம்தேதி நடைபெறவுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மலைக்கோவில் மேல்பிரகாரத்தில் உள்ள பாறைவேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகிய பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் ஊன்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று முகூர்த்தக்கால் ஊன்றினர். தொடர்ந்து பழனி மலைக்கோவில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்கவிமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு, 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்கு கதவுகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டது. முன்னதாக பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில் குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்...பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கைது...!