திருப்பூர் : திருப்பூரை அடுத்த மங்களம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்த தடுப்பணை, கட்டப்படும் போது நடுவில் உடைந்து கொண்டே இருந்ததால் நல்லம்மன் என்ற சிறுமி அங்கு உயிர்த்தியாகம் செய்தார்.
தொடர்ந்து அணை உடையாமல் இருந்தது. ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. நல்லம்மன் தடுப்பணையில் தடுக்கப்படுகின்ற தண்ணீர் ராஜ வாய்க்கால் மூலமாக சின்ன ஆண்டிபாளையம் குளத்துக்கு சென்று பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
மேலும் படிக்க | படிப்படியாக குறையும் மழையின் தீவிரம் - வானிலை ஆய்வு மையம்
இந்த நிலையில் தற்போது பெய்கின்ற தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வழக்கமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் இந்த தடுப்பணையில், தற்போது மழை வெள்ளம் அருவியாக கொட்டுகிறது.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக நலம்மன் கோவிலுக்கு செல்கின்ற சிறு பாலம் ஒரு பகுதி உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மழை வரும் பட்சத்தில் நல்லம்மன் கோவிலும்மூழ்கி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.