தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மலை போல் தேங்கியுள்ள நிலையில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மே 24ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள இரண்டு தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் பத்தாயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்து நாட்களாக மழை பெய்ததால் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி வழங்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆலக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர், முன்னதாக பெய்த கனமழை மற்றும் இனிமேல் வரவுள்ள பருவமழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி அனைத்து நெல்லையும் ஓரிரு நாட்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இல்லையெனில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடும் பாதிப்பை விவசாயிகள் சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.