சாயக்கழிவுகளால் சாக்கடையான ஓடை நீர்...  நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு...?

சாயக்கழிவுகளால் சாக்கடையான ஓடை நீர்... நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு...?

பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாயக் கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

பொதுவாக சாயப் பட்டறை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்ட பின்னரே வெளியேற்றப்பட வேண்டும். அவ்வாறு சுத்திகரிக்கப்பட்டாலும், நீர்நிலைகளில் கலக்க அனுமதி இல்லை. அவற்றை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற வேண்டும் என்பது விதி.

னால், அந்த விதியை மாற்றி சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், ஆறு, ஓடை போன்ற நீர் நிலைகளில் கலக்கப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றில் தண்ணீர் கரைப்புரண்டு ஓடினாலும், வற்றிப் போனாலும், மழை பெய்தாலும், மழை பொய்த்தாலும்,  சாயக் கழிவு மற்றும் தோல் ஆலைக்கழிவுகள், ஆற்றில் கலப்பது தொடர்கதையாகி வருகிறது. 

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 550 சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் ஆறு, ஏறி, ஓடை, குளம், குட்டை என அனைத்து நீர் நிலைகைளிலும் கரும்பச்சை நிறத்தில், துர்நாற்றம் வீச, ரசாயனக் கலவையுடன் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.  இந்த நீர் கால் நடைகள், பறவை இனங்கள் கூட குடிக்க முடியாத நிலையில் உள்ளது. 

இந்த நீரை பயன்படுத்துவதால் அப்பகுதி மக்களுக்கு தோல் நோய் முதல், புற்றுநோய் தாக்குதல் வரை அதிகரித்து வருகிறது. காவிரி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளில் கடந்த பல ஆண்டுகளாக சாயக்கழிவு கலக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

இதனை சுற்றுச் சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காளிங்கராயன் வாய்க்கால், பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, பெரும்பள்ளம் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் சாயக்கழிவுகள் கலக்காமல் இருந்திருந்தால் தண்ணீருக்காக மக்கள் அவதிபடும் நிலை ஏற்படாது. 

இந்த சாயக்கழிவுகள் கலப்பதால் நிலத்தடிநீரும் கெட்டுப் போய், விளை நிலங்கள் மலடாகி வருகின்றன. எத்தனை சட்டங்கள் போட்டாலும், சாயக்கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதை தடுக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. 

இதே நிலை நீடித்தால், ஈரோட்டில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதை மறுப்பதற்கில்லை. இதைத்தான் விரும்புகிறதா தமிழ்நாடு அரசு... நடவடிக்கை எடுக்குமா ஈரோடு மாநகராட்சி..., மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்...

மாலை முரசு செய்திகளுக்காக ஈரோடு செய்தியாளர் மக்பூல் அஹமத்...

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com