திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன். பேக்கரி உரிமையாளரான இவர் கடந்த 10ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலீசார் சோதனை சாவடி எதிரே பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் உரிமையாளர் மோகன் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவு 11 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன் பின்னர் இன்று காலை வழக்கம்போல் மோகன் கடையை திறந்து பார்த்த போது கடையின் பின்பக்கம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கடையில் வைத்திருந்த 80 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதும் தெரிய வந்தது.
இதையடுத்து உரிமையாளர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது மர்ம நபர் ஒருவர் பின்பக்க வழியாக வந்து கடையில் இருந்த குளிர்பானத்தை குடித்து கொண்டு சாவகாசமாக பணப்பெட்டியில் இருந்து பணம் திருடுவது பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து குமாரபாளையம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் கடந்த மாதம் மோகனின் பேக்கரி எதிரே உள்ள உணவகத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு திருடி சென்ற நபர் போன்று உள்ளது என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
எடப்பாடி சாலையில் காவேரி நகர் பகுதியில் குமாரபாளையம் காவல் நிலையத்தின் சோதனை சாவடி அமைந்துள்ளது. ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் முக்கிய பகுதி. இந்த பகுதியில் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.